சித்தர் கல்வி


சித்தர் கல்வி சாகாக் கல்வி

சித்தர் கல்வி என்பது நமது உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது ஆகும்.

  1. இக்கல்வியை கற்றால் இறப்பை தவிர்த்து ஒளி உடல் பெற்று மரணத்தை வெல்லலாம். இதற்கு “வாசி" யோகம் செய்து 72,000 நாடி-நரம்புகளை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்து ஒளி உடல் பெற்றால் அதுதான் “முக்தி” நிலையாகும். அதன் பின் மரணம் கிடையாது. இது தான் சாகாக் கல்வியாகும்.
  2. இப்பிறப்பில் சிலர் பல பட்டப்படிப்பு படித்து விடுவார்கள். அவர்கள் இறந்து மீண்டும் அடுத்த பிறவியில் ஆரம்பக்கல்வியிலிருந்து படிக்கவேண்டும். ஆனால் சித்தர் கல்வியை ஒருவர் கற்றுக்கொள்ளும் போது அவர் சூழ்நிலை, உடல்நிலை காரணமாக இறக்க நேர்ந்தால் அவர் அப்பிறவியில் 35,000 நாடி நரம்புகளை சுத்தம் செய்து இருந்தால், அடுத்த பிறவியில் 35,000 நாடி நரம்புகளில் இருந்து தான் தொடங்கும். ஆகவே ஏற்கனேவே போன பிறவியில் கற்ற சித்தர் கல்வி மறுபிறவியிலும் தொடர்கிறது. ஆகையால் இது சாகாக் கல்வியாகும்.
  3. ஒருவர் இப்பிறவியில் சித்தர் கல்வியை கற்றுக் கொள்ளும் போது பிராணசக்தியை அதிகப்படுத்தி உடலை சுத்தப்படுத்தும் போது, நம்முடைய தேகம் ஒளிநிலையை அடைந்தால் இறப்பு கிடையாது. ஆகவே இறப்பு இல்லாததால் இது சாகாக் கல்வியாகும்.

சுவாசம்

சுவாசம் என்றால் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது என்று கூறப்படுகிறது. மூக்கின் இரண்டு துவாரங்களிலும் சுவாசம் நடைபெறுகிறது. வலது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சூரிய சுவாசம் என்றும், இடது நாசி துவாரத்தின் மூலம் நடைபெறும் சுவாசத்தை சந்திர சுவாசம் என்றும் கூறப்படுகிறது. சுவாசமானது வலது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, இடது நாசியில் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் வெப்பத்தன்மை இருக்கும். அதனால் இதனை சூரிய சுவாசம் என்று கூறுவர். இதேபோல் இடது நாசியில் தொண்ணூறு சதவிகிதம் நடைபெறும் போது, வலது நாசியில் சுவாசம் பத்து சதவிகிதம் நடைபெறும். அப்போது உடலில் குளிர்ச்சியான தன்மை, மிதமான வெப்பம் இருக்கும். அதனால் இதனை சந்திர சுவாசம் என்று கூறுவர்

இரண்டு நாசி வழியாகவும் சரிசமமாக நடைபெறும் சுவாசத்தை சுழிமுனா சுவாசம் என்று கூறுவர். இந்த சுவாசம் நடைபெறும் போது நமது உடலில் வெப்பம், குளிர்ச்சித்தன்மை இல்லாமல் அதிக வெப்பநிலை இருக்கும். அதனால் இதனை சுழிமுனா சுவாசம் என்று கூறுவர்.

இந்த மூன்று சுவாசங்கள் நமது உடல் முழுவதும் பரவுகிறது. சூரிய சுவாசமானது மூக்கின் வலது நாசி துவாரத்திலிருந்து இடது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. அதே போல் சந்திர சுவாசமானது மூக்கின் இடது நாசி துவாரத்திலிருந்து வலது கால் வரை 16 ஸ்தானங்கள் ஆக 32 ஸ்தானங்கள் ஏறி இறங்குகிறது. ஆனால் சுழிமுனா சுவாசமோ மூக்கின் நுனியிலிருந்து கால்வரை உடல் முழுவதும் பரவி செல்கிறது. இவையே நமது உடலில் மூன்று சுவாசங்களின் செயல்பாடாகும்.

Top


பிராணாயாமம்:

Iஉலக வழக்கில் பிராணாயாமம் என்றால் சுவாசத்தை சரிசெய்யக்கூடிய பயிற்சி என்று கருதப்படுகிறது. அதாவது மூன்று சுவாசங்களையும் சரிவர (ஒரே அளவாக) ஓடச்செய்வது தான் பிராணாயாமம் என்று கருதப்படுகிறது.

மேலும் இதன் மூலம் உடலுக்கு, காற்றிலிருந்து கிடைக்கக்கூடிய பிராண சக்தியின் அளவு அதிகமாக கிடைப்பதாக கருதப்படுகிறது. இது உண்மையில் பிராணாயாமம் என்று சொல்வதைவிட சீரான சுவாசப்பயிற்சி என்று மக்களால் கருதப்படுகிறது. அதனால் தான் மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஏனென்றால் இவையனைத்தும் சுவாசத்தை சீராக வைத்துக்கொண்டு, தேகம் சீராக இயங்க உதவுகிறது

ஆனால் உண்மையில், பிராணயாமம் என்பது சுவாசத்தை மட்டும் சீராக வைத்திருக்க உதவும் ஒரு விஷயமாக இல்லாமல், சுவாசக்கலைகள், தேகம், மனம்,உயிர், ஆன்மா போன்ற அனைத்தையும் சரிவர இயங்க உதவிப்புரியும் ஒரு பயிற்சியாக இருக்கிறது. ஆனால் காமம், கோபம், குரோதம், பொறாமை போன்ற அவஸ்தைகள் மூலம் சுவாசம் கட்டுப்படாமல் போகிறது. அதனால் நாம் உயிராற்றலை இழக்கிறோம்.

பிராணாயாம பயிற்சி என்றால் நமது உடலில் சூரியன், சந்திரன், சுழிமுனா என்ற மூன்று சுவாசங்கள் நடைபெறுகிறது. இந்த சுவாசங்களை ஒரே கலையாக்கி பிராணாயாம பயிற்சி செய்யும்போது அங்கு உயிராற்றல் அந்த சுவாசத்தோடு கலந்து உடல் முழுவதும் சென்று எல்லா நாடி நரம்புகளையும், உறுப்புகளையும் பலப்படுத்திகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. இப்பயிற்சியில் மட்டும் தான் மற்ற பிராணாயாம பயிற்சியைவிட உயிராற்றல் அதிகமாக உற்பத்தியாகிறது.

அதனால் மனதால், காமம், கோபம் குரோதம், பொறாமை போன்ற உணர்வுகளை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் இந்த உணர்வுகளின் மூலம் உயிராற்றல் செலவாகாமல் இருக்கிறது. ஆகையால் சுவாசத்தில், உயிராற்றலை கலக்கக்கூடிய பயிற்சிதான் பிராணாயாமம் என்பதாகும். இந்த பயிற்சியை சித்தர்கள் செய்து வந்தனர். சித்தர்கள் பரிபாஷையில் இந்த பயிற்சிக்கு "வாசி" என்று பெயர். அதனால் தான் இந்த பிராணாயாம பயிற்சியை நாங்கள் "வாசி" என்றே அழைக்கிறோம்.

Top


தியானம்

தியானம் என்றால் மனதை ஒருநிலை படுத்துவதாகும். சரி மனதை எதில் ஒருநிலை படுத்துவது?

காற்றுக்கு ஒப்பிட்டு மனதை நமது சித்தர்கள் கூறி இருக்கிறார்கள். பஞ்ச பூதத்தில் காற்று மனமாக சித்திரிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் காற்று வடிவமான மனம் அலைபாய்கிறது. அப்போது அதை நிறுத்தினால், நிதானமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

மனதை எதில் நிலைபெறச் செய்யவேண்டும்?

மனதை உடலில் ஓர் இடத்தில் நிற்க வைத்தால் அங்கு வெப்பம் உண்டாகும். அப்போது அங்கு உயிராற்றல் வந்து அதனுடன் கூடி, மனம் ஒரு திட நிலை பொருள் போல உருவாகி, மணிப்போன்று உருவாகி, நமதுஉடலில் உள்ள அனைத்து உணர்வுகளும், எண்ணங்களும் அதில் சேர்ந்து அந்த மணியை, அதாவது மனதை உணர ஆரம்பிக்கும். அது ஒரு மணியை போல விளங்கும். இதை உருவாக்கும் நிலைக்குத்தான் தியானம் என்று பெயர்.

அப்போது மனதில் எண்ணங்கள் பல இல்லாமல், ஒரே எண்ணம் அந்த உணர்வில் மட்டும் தான் இருக்கும். இந்த தியானப் பயிற்சி தான் எந்த ஒரு விஷயத்தில் மனத்தை செலுத்தினாலும், மனம் அதில் ஒன்று பட்டு, நிலைத்துநின்று, அந்த விஷயத்தில் தெளிவான முடிவை எடுக்க உதவும். மேலும் நமக்கு வரும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி அடைய முடியும். இதுதான் தியானத்தின் பலன் ஆகும்.

மனதை உயிராற்றலில் ஒன்றுப்படுத்துதல் தியானம் ஆகும்.  தியானத்தின் பலன் ஆறாவது அறிவை, ( மணி உருவாக்குவதை ) அறிவது ஆகும்.

மணியை உற்பத்தி செய்பவன் மனிதன் ஆகிறான்.

Top


மனதின் செயல்:

1. பிறப்பிற்கு முன் மனம்:

மனம் என்பது பஞ்ச பூத அணுக்கள் போன்ற ஓர் அணுவாகும். பஞ்ச பூத அணுக்களில் பல செயல்கள் பதிவாகி உள்ளது. ஆனால் மனதின் அணுவில் அவ்வாறு பதிவுகள் இல்லை. அது ஓர் தூய்மையான கண்ணாடி போல் இருக்கும். மற்ற ஐந்து அணுக்களிலுள்ள பதிவுகளை அதனால் பிரதிபலிக்க முடியும். மனதின் அணு பிறப்பிற்கு முன் அது ஆகாய அணுவில் ஒடுங்கியிருக்கும்.

2. பிறப்பிற்கு பின் மனம்:

சூட்சும சரீரம், ஸ்தூல சரீரத்தில் வந்தவுடன் ஆகாய அணுவிலிருந்து பிரிந்து பிருத்வி (மண், பூமி) என்ற அணுவில் சேர்ந்து இயங்கும். இது மூலாதாரம் எனப்படும் இடமாகும். அப்போது தூயக்கண்ணாடி போன்ற மனம் எட்டு அவஸ்தையால் கவரப்பட்டு தூய்மை கெடுகிறது. மேலும் தமோ குணமும் சேர்ந்து இன்னும் அசுத்தமாகிறது. முதலில் மனம் இயங்கும் இடம் மூலாதாரமாகும்.

3. மனதின் தன்மை:

மனம் ஆகாய அணுவிலிருந்து விடுபட்டு அது மூலாதாரத்தை அடைந்ததும் தனது ஆகாயத்தன்மையில் இருந்து விடுபட்டு அக்னித் தன்மைக்கு வரும், பிறகு அது காற்றின் தன்மையை அடையும். இதுபோல பஞ்ச ஒளியாக சகஸ்ரஸ்தலத்தில் இருக்கும் ஒளி மூலாதாரத்தை அடையும். அப்போது பஞ்ச ஒளி சக்திகள் மூலாதாரத் தன்மையால் பஞ்சபூத நிலையை அடையும். அதாவது, ஒளி ஒடுங்கும் தன்மை உடையது. பூதம் விரிவடையும் தன்மை உடையது. பூதத்தன்மையாகிய மனம் விரிவடைந்து உடல் முழுவதும் எல்லா ஸ்தானங்களுக்கும் போய் வரும். அப்போது அந்தந்த நிலையில் எதை சார்ந்து இருக்கிறதோ அதை வெளிப்படுத்தும்.

4. மனதின் செயல் :

மனம் தூய்மையானது. அது சேர்ந்து செயல்படும் ஆதாரங்கள், அக்னி கலைகள், சுவாசக் கலைகள், புலன்கள், விதிகள், அவஸ்த்தைகள், குணங்கள் போன்ற நிலைகளில் செயல்படும் போது எண்ணங்கள் தோன்றி மனம் அதன் தன்மைகளை (பதிவு) வெளிப்படுத்துகிறது. இதனால் மனம் நல்லதாகவும், கெட்டதாகவும் தெரிகிறது. மனதை பூத வடிவில் சொல்ல வேண்டுமானால் அது காற்றாக சொல்லப்படுகிறது. மனம் காற்றாக இருப்பதால் அது அலைபாய்கிறது என்பார்கள். ஆனால் உண்மையில் மனம் ஒளித்தன்மை உடையது (அது யோகத்தில் முழுமை அடையும் போது தெரியும் மனம்). மனம் மற்ற ஆதாரங்கள், தத்துவ நிலைகளில் உள்ள பதிவுகளை வெளிப்படுத்துகிறது. அப்போது அந்த பதிவில் அவஸ்தைகளும் சேர்ந்து, மனதை நல்லதாகவும், கெட்டதாகவும் மாற்றுகிறது.

மனதில் எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணம் விதியாகும். அதை மனம் பிரதிபலிக்கிறது. உடல் முழுவதும் விதி படிந்து இருப்பதால், மனம் எந்த இடத்தில் எந்த விதி இருக்கிறதோ அதை பிரதிபலிக்கும்போது அந்த விதியில் உள்ள செயல்களின் பதிவுகளை எண்ணங்களாக பிரதிபலிக்கும். பொதுவாக ஓர் அணுவிலிருந்து ஆறு அணு வரை எடுக்கும் பல பிறவிகளின் செயல்கள் நம்முடைய ஆன்மாவில் பதிவாகிவிடும். இது தான் விதி என்று சொல்லப்படும்.

மனம் மூலாதாரத்திலிருந்து உற்பத்தியானவுடன் அங்கு எட்டு அவஸ்தைகளும் அதனுடன் சேர்ந்து இயங்கும். உடலில் ஓர் பொருளை நாம் பார்த்தவுடன் எண்ணங்கள் மனதில் தோன்றும். அ ப்போது மனதில் உள்ள எட்டு அவஸ்தைகளின் தன்மைகளும் தோன்றும். அந்த எண்ணங்கள் நல்வினை பதிவிலிருந்து வந்தால் அந்த பொருளின் தேவையை அலசி ஆராய்ந்து எந்த வித நஷ்டமும், மன உளைச்சலும் இல்லாமல் அந்த செயல் மகிழ்ச்சியை தரும் செயலாக அமையும். விதி சரியில்லை என்றால் அந்த பொருளின் மூலம் வரும் எண்ணங்களால் நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டு, மகிழ்ச்சியை இழக்கும். ஆக இப்படி தான் ஒவ்வொரு செயலும் நடைபெறுகிறது.

5. சாதாரண மனித மனம் செயல்படும் விதம்:

உலக வாழ்க்கையில் மனித மனம் செயல்படும்போது சில நல்ல நிகழ்வுகளும், பல தீய நிகழ்வுகளும் ஏற்படும், இதை அறிந்த ஞானிகள், மனித மனம் ஓர் அளவு பக்குவப்பட உடற்பயிற்சி, சுய ஒழுக்கம், நல்ல விஷயங்களை சிந்திப்பது, பக்தி, நீதிக்கதைகள், பக்திபாடல்கள், தியானம், யோகம், போன்ற வழிமுறைகளை ஏற்படுத்தி அவரவர் மனதிற்கு ஏற்ப பல விஷயங்களை கடைபிடிக்கச் செய்தார்கள். இந்த வழிமுறைகளில் ஓர் அளவிற்கு மனிதமனம் பக்குவத்திற்கு வந்தது.

மன வளர்ச்சியை ஏற்படுத்தி, பகுத்தறிவு, சமத்துவம் போன்ற நிலைகளை கடந்து வந்தாலும், மனித மனதை உண்மையாக ஒழுங்கு படுத்த உலக வாழ்க்கையில் முடியாமல் போய்விடுகிறது. இதற்கு காரணம், வேறு ஒரு மனித மனதின் செயல்பாடாகும். அதாவது நல்வினை - தீவினை உடையவனும், தீய மனம் உடையவனும் சேர்ந்து இயங்கும்போது கட்டுப்படுத்தப்பட்ட மனம் கூட தவறு செய்கிறது. இது தான் சாதாரண மனித மனதின் செயலாகும். பொதுவாக இப்படி நடைபெற விதியின் தன்மையும் ஒரு காரணமாகும்.

நல்விதி உள்ளவன் செயல் தீயவிதி உள்ளவனுடன் சேர்ந்து இயங்கும் போது எப்போதும் பிரச்சனைக்குள்ளாகும். இது ஒரு பகுதி. இரண்டாவது பகுதி – ஒரே மனிதனின் மனம் தீவினையில் செயல்படும் போது ஒரு முடிவும், நல்வினையில் செயல்படும் போது ஒரு முடிவும் எடுக்கிறான். ஆகையால் மற்ற மனிதனின் செயல்களையும், நமது செயல்களையும் பல நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் பல சிக்கல்களுக்கு ஆளாகி அவஸ்தை படுகிறோம்.

மனிதன் தன் திறமையின் மூலம் ஏதாவது ஒன்றில் திறமை பெற்று வாழ்க்கை நடத்தி தன் காலம் முழுவதும் அந்த செயலிலேயே மகிழ்ச்சி அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக நினைத்து வாழ்ந்து வருகிறான். இது தான் சாதாரண மனித மனம், விதி, அவஸ்தைகள், முக்குணங்கள் இவற்றிலிருந்து விடுபடாமல் செயல்படும் விதமாகும். இந்த வாழ்க்கையை அலசி ஆராய்ந்தால் பெரும்பாலும் தோல்வியில் தான் முடியும். இதை அவர்கள் மனம் ஏற்க மறுக்கும். இந்த நிலையை தான் மாயை என்று கூறுவர்.

6. மன அடக்கம்:

மன அடக்கம் என்று எல்லா ஞானிகளும் கூறுகிறார்கள். அது எப்படியென்றால் மனம் சுவாசத்தில் சேர்ந்து இயங்கும். அதை வாசி என்ற பயிற்சி மூலம் உயிர்காற்றான பிராணனில் மனதை ஓடவிடவேண்டும். பிறகு மனம் ஓர் கட்டுப்பாட்டுக்குள் வரும். அப்போது அது அக்னியில் ஒடுங்கி, ஜோதியில் லயித்து பின், மனம் ஆகாய அணுவில் ஒடுங்கும் இது தான் மனம் அடக்குதல் என்பதாகும். இப்படி அடங்கி பழகி அது வாழ்க்கை செயல்களில் தெளிவு பெறும் நிலை ஏற்படும். இதனால் மன அமைதி கிடைக்கும்.

7. மனமும் குணங்களின் செயல்களும்:

மனிதன் பல பிறவிகளில் பெற்ற வாழ்க்கை அறிவின் பதிவுகளால் குணத்தின் தன்மை வளர்கிறது. மொத்தம் மூன்று குணங்களில் மனம் செயல்படும். அவை தமோகுணம், ரஜோகுணம், சத்வகுணம். இந்த குணங்களும் அந்தந்த ஆன்மா பல பிறவிகளில் பெற்ற வாழ்க்கை அனுபவ அறிவின் படி அதன் தன்மை பெருகும். மூன்று குணங்களும் அவரவர் பதிவின் படி இயங்கும்.

சத்வகுணம் உள்ளவர்கள் மனம், விதியின் செயலை நன்கு கண்காணித்து செயல்பட அந்த சக்தி மனதிற்கு உதவும்.

ரஜோகுணம் சிறிது அனுபவ குறைவுடன் உள்ளதால் மனம் விதியின் செயலை ஓர் அளவுக்கு தான் அறியும், மீதி அவஸ்தைகளுடன் சேர்ந்து இயங்கும்.

தமோகுணத்தில் சிறிதளவு தான் விதியின் செயலை மனம் அறியும் சக்தி உண்டு. பிறகு முயற்சியை கைவிட்டு விடும். வெறும் புலன் வசப்பட்டு அதன் இன்பத்திற்காகவே அவஸ்தைகளுடன் துன்புற்று வாழ்வார்கள்.

8. சிந்தனை:

மனம் எண்ணங்களை ஆராய்தல்தான் சிந்தனை. மனம் தன் தேவையை முன்னிட்டு அதன் பிரச்சனைகளை பற்றி சிந்திக்கும். அப்போது மனம் அதற்கு தேவையான சக்தியை பெறுவது எப்படி என்றால் சிந்திக்கும் போது சுவாசம் சீராக இயங்கும், அப்போது உடலுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும். இதனால், உடலுக்கு, உயிர்காற்று என்ற பிராணன் தேவை குறையும். அப்போது மனம் அந்த உயிர்காற்றை சிந்தனை செய்யும் போது ஏற்படும் சக்தி இழப்புக்கு எடுத்துக் கொள்ளும், இதனால் மனம் சிந்தனை செய்யும் போது அவஸ்தையின்றி தெளிவுடன் அது அந்த பிரச்சனையில் ஒன்றிணைந்து எண்ணங்களை ஆராய்ந்து முடிவெடுத்து, அதனை செயல்படுத்தி ஓரளவுக்கு பிரச்சனையிலிருந்து விடுபடுகிறது. இது தான் சிந்தனை செய்தல் ஆகும். இதனால் விதியின் பாதிப்பிலிருந்து சிறிதளவு விடுபட முடிகிறது.

9. யோகத்தில் மனதின் செயல்:

யோகம் செய்யும் போது மனம் எப்படி செயல்படும் என்றால் அதுவும் உலகவாழ்க்கையில் உள்ள மனிதன் போல்தான் செயல்படும். அவஸ்தைகள், குணங்கள், விதியின் மூலம் வரும் எண்ணங்கள் ஆகியவையும் சாதாரண மனிதனைப் போல் செயல்படும். ஆனால் யோகம் செய்பவர்கள் அப்படி இல்லாமல் மிகவும் அமைதியாகவும், பிரச்சனைகளை எதிர்கொள்வதிலும், ஒரு தனித்தன்மை இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் யோகப்பயிற்சி செய்தல் ஆகும்.

யோகம் செய்பவர் முதலில் பிராணாயாமம் பயிற்சி மூலம் உயிர்காற்றின் சக்தியை புலன், எண்ணங்கள் வழி செல்லாது தடுத்து மனதை அதில் லயிக்கச்செய்து பிறகு அதில் நீண்ட நேரம் மனம் இருப்பதால் அது அவஸ்தை, குணம், புலன் இச்சை இவற்றிலிருந்து விடுபட்டு இறை சிந்தனையில் இருக்கிறது. இது தான் தவம் எனக் கூறப்படுகிறது. இப்படி யோகம் செய்வதில் மனம் அலைபாயாமல் இருந்தால் அவர் பயிற்சியில் இல்லாத நேரத்திலும் உயிர்காற்று வெளியேறாமல் இருப்பதால் மனம் எப்போதும் நிதானமாக இருக்கும். இதனால் விதியின் மூலம் வரும் எண்ணங்களை சீர்தூக்கி பார்த்து செல்பவர்கள் பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபடுகிறார்கள். ஆனால் அவர்களும் வினைவசத்தால் அதன் மூலம் வரும் எண்ணங்களை முழுவதுமாக ஆராயவேண்டும். இல்லையென்றால் மீண்டும் வினைப்பதிவு ஏற்படும். இதன் மூலம் அவர்கள் சில நேரங்களில் நல்லவராகவும், கெட்டவராகவும் காணப்படுகிறார். இது மற்றவர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும். அதாவது ஒரு யோகி இப்படி நடக்கிறாரே என யோசிப்பர். அப்படி அவர்கள் நினைப்பது தவறு கிடையாது. யோகிகளும் விதியின் மூலம் வரும் எண்ணங்களை சீர்தூக்கி பார்க்கவில்லை என்றால் இழிநிலை ஏற்படும். இதற்கு தான் யோகம் பயில்பவர் ஒரு குருவை நாடுகிறார்கள். அவர் மூலம் தமக்கு வரும் நல்ல மற்றும் கெட்ட எண்ணங்களை குருவிடம் கூறி தெளிவு பெறுவார்கள். யோகி தன் வாழ்க்கையில் தெரியாமல் சில தவறு நடந்தாலும் பிறகு எந்த தவறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது எதனால் என்றால் யோகம் செய்யும் போது மனம் + உயிர்காற்று சேர்ந்து எல்லா நாடி நரம்பிலும் (சூட்சுமம், ஸ்தூல உடல்) படிந்திருக்கும் விதியை அழிக்கும். அப்படி அழிக்கும்போது அழிபவை எண்ணங்களாக வந்து நம்மை துன்புறுத்தும். ஏற்கனவே நாம் நல்ல பழக்கங்களை கொண்டிருந்தாலும், இதன் மூலம் புதிய கெட்ட எண்ணம் தோன்றும். அதை ஊழ்வினை என்று நாம் உணர்ந்து செயல்படாமல் விட்டு விட்டால் அந்த வினை அழிந்து விடும். சில வினைகள் கனவிலும் அழியும்.

10. முக்தி நிலையில் மனம்:

மனம், விதியின் மூலம் வரும் எண்ணங்களில் அவஸ்தை, குணங்கள் இவைகளில் கலக்காமல் யோகி கட்டுபடுத்திவிடுகிறார். விதியை ஆத்ம ஒளிகொண்டு அழிக்கிறார். சில விதிகளை அவர் அழிக்கமுடியாது. அதை அவர் அனுபவிப்பார். எப்படி என்றால் அந்த விதியின் மூலம் வரும் செயலை மட்டும் கவனிப்பார். அதற்கு எந்த ஒரு எதிர் செயலையும் செய்யாமல் அந்த விதியை அவஸ்தையும், குணமும் அதனுடன் சேர்ந்து கொள்ளாமல் பார்த்து அனுபவிப்பார். இந்த நிலையில் வெட்டவெளி ஜோதி அவர் மனதில் இருந்து ஆன்ம ஒளியையும் பெருக்கி எல்லா தத்துவ நிலைகளும் அந்த ஜோதியைப் பெற்றுவிடுவதால் நடக்கும். அனைத்து விதியின் தன்மையை அறிந்து அவர் செயல்படாமல் சாட்சியாக மட்டும் இருப்பார். இந்நிலையில் உலக பொருள், வாழ்க்கை, மனிதர்கள், உறவுகள் இவற்றின் பந்தங்களிலும் விடுபட்டு விடுவார். இந்நிலை தான் முக்தியாகும். மனம் சாட்சியாக மட்டும் இருக்கும்.

11. சித்தி நிலையில் மனம்:

முக்தி நிலையிலேயே மனம் சாட்சியாக இருப்பதால் சித்தி பெற்ற மனதில் அன்பும், கருணையும் மட்டும் இருக்கும். வேறு எதுவும் தோன்றாது. சித்தி பெற்றவர் பொருளையோ, மனிதர்களையோ, உறவுகளையோ, சீடர்களையோ எதை பார்த்தாலும் அதிலிருந்து எந்த எண்ணமும் தோன்றாது. அவை பொருள், உறவு, மனிதன் என்று மட்டும் விளங்கும். மற்றபடி வேறு எந்த எண்ணங்களும் தோன்றாது. ஆக இது மனமற்ற நிலையாகும். மேலும் மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலில் இருந்து கடந்து நிற்பார். மனம் சாதாரண மனிதன் முதல் ஞானிவரை இப்படி தான் செயல்படுகிறது.

பிரணவத்தின் ஐந்து பாகம்: அகாரம், மகாரம், உகாரம், விந்து, நாதம்-(பஞ்சமி எனும் வாக்கு). பஞ்சமி எனும் வாக்கு - ஸ்தானம் = மூலாதாரம்.

Top


மணி:

மணி என்பது யோகம் பயில்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகுதியை கொடுக்கக்கூடிய நிலையாகும்.

மணி என்றால் என்ன?

மணி என்றால் ஒரு திடநிலையில் உள்ள ஒரு பொருள் என்று நாம் அறிவோம். அதுபோல் நாம், நம்முடைய மனதை ஓர் இடத்தில் நிலைபெற செய்யும் போது அந்த இடத்தில் மனம், காற்றின் வடிவாமாக இருக்கிறது. அப்போது அங்கு உயிராற்றல், மனம் நிற்கும் இடத்தில் வந்து சேர்கிறது. அந்த நிலையை, அந்த உயிரற்றலை நம்மால்  உணர முடியும். அப்பொழுது அந்த இடத்தில், மனம் ஒரு உருண்டையான வடிவத்தை உணர்கிறது. அதற்கு பெயர் தான் மணியாகும்.

இது எப்படி உருவாகுகிறது என்று பார்ப்போம். முதலில் மனதை ஒரு இடத்தில் நிறுத்தும் போது எண்ணங்கள் கட்டுப் படுகிறது. அப்பொழுது ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் இருக்கும், அது என்னவென்றால், மனதை ஒரு இடத்தில் நிறுத்துகிறோம் என்ற எண்ணம் தான் இருக்கும். நமது மூக்கின் வழியாக ஓடக்கூடிய சுவாசம் ஆனது மெதுவாக உடலுக்குள்ளே ஓட ஆரம்பிக்கும். அப்பொழுது உயிராற்றல் அந்த இடத்தில் சுவாசத்துடன் கலக்கும், உடல் சிறிது வெப்பம் அடையும். அடுத்ததாக நம் உடலை இயக்கக்கூடிய தசவாயூக்களும் (10 வித வாயூக்களும்) மெதுவாக வெப்பம் அடைந்து அந்த வாயுக்களும் உயிராற்றலை பெற்று அனைத்து ஆங்ஞா சக்கரமும் இயங்கி கொண்டிருப்பதால், மனம் ஒளிநிலையை அடைகிறது, அப்பொழுது அவஸ்தைகள் குறைவதால் எண்ணங்கள் கட்டுப்படுகிறது. அதனால் நாம் எந்த விஷயத்திலும் விருப்பு-வெறுப்பு இன்றி நிதானமாக செயல்பட முடிகிறது. இதன் மூலம் நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் வெற்றிக்கொண்டு அமைதியாக வாழ முடிகிறது.

ஆகவே மணி உற்பத்தி ஆவதன் மூலம் வாழ்க்கையை அமைதியாக நடத்துவது தான் இறைநிலையை அடைய முதல் படியாகும்

Top


உயிர்:

பஞ்ச பூதங்களின் கூட்டு தான் உயிராகும். நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம் இந்த கூட்டுக் கலவையில் உள்ள அணுக்கள் ஒன்று சேர்ந்து ஓர் உயிராக உருவாகிறது. இது எப்படி என்றால், ஓர் விதையை மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றி அது வளர்கிறது. அது வளர்வதற்க்கு தேவையான பொருட்களாக மண், நிலம், நீர், காற்று, வெப்பம், சூரிய ஒளி, சந்திர ஒளி அவை சேர்ந்ததே திறந்த வெளியான ஆகாயமாகும்.

இதில் ஒரு உயிர் உற்பத்தியாவதற்கு பஞ்ச பூத சக்தி எப்படி உதவுகிறது என்று நமக்கு தெரிகிறது. பல உயிரினங்களாக இந்த பஞ்ச பூத சக்தி உருவெடுத்து, கடைசியில் மனித ரூபம் எடுக்கிறது. அப்போது பஞ்ச பூத சக்தியின் நிலை என்ன என்றால் காற்றானது மனமாகவும், தண்ணீரானது உயிராகவும்,நெருப்பானது உடல் இயங்கும் சக்தியாகவும், மண் என்பது உடலாகவும், ஆகாயம் என்பது ஆத்மா இருக்கும் இடமாக விளங்குகிறது. இதுதான் மனித ரூபம். இது அனைத்தும் சேர்ந்து ஓர் மனித உயிராக உருவெடுக்கிறது

Top